Saturday, October 4, 2025

கார்கால மேகங்கள்!

சில்லென்ற சாரல் சாளரத்தின் வழியே தேகத்தை வருட, பல ராகங்களோடு வானம்பாடிகள் வானெங்கும் வலம்வர, மேகங்களோடு முட்டி மோதிக்கொண்டு தனது வருகையை பூமிக்கு தெரிவிக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஆதவனின் சில ஒளிக்கற்றைகள் அந்த விடுதியின் முன்னே பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களின் மீது பட்டு, காணும் திசையெங்கும் இயற்கை தன்னை ஆசிர்வதிப்பதைப் போன்ற ஓர் காட்சி;  இவற்றையெல்லாம் அமைதியாக சாளரத்தின் வழியே ரசித்தபடி எங்கோ தயாராகிக் கொண்டிருந்தாள், பார்வதி! அப்பொழுது அவளது கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது, இன்னும் சில நாட்களுக்கு மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இன்று நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு இன்னும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படுகிறது, தாங்கள் தற்பொழுது தங்கியுள்ள அறைகளிலேயே தங்கிக்கொள்ளலாம். இந்த உரையாடல் நடந்து முடிவதற்குள்ளேயே, வானெங்கும் இருள் மேகங்கள் சூழ்ந்து காலைப் பொழுது இரவுபோலானது. இந்த மாற்றங்கள் பார்வதிக்குப் புதிது, ஆனால் இந்த இடத்திற்குப் புதிதல்ல. ஆம், தற்பொழுது இவள் இருப்பது உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடமான இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் மௌசின்ரம்  மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தான்.

மௌசின்ரம் என்பது மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைகளைக் கொண்ட மாவட்டத்திலுள்ள ஊராகும். இதுவே உலகின் அதிகமான சராசரி ஆண்டு மழைப்பொழிவைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 11,872 மிமீ மழை பெய்கின்றது. இது முன்பு அதிக சராசரி மழையைப் பெற்ற இடமான சிரபுஞ்சியிலிருந்து 16 கிமீ மேற்கே உள்ளது.இது 1400 மீட்டர்கள் உயரமான மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமமாகும்.19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா என்று மாற்றியது. அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருகிறது. சோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது. சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.


காலநிலை மாநாடு தள்ளிவைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பார்வதி சற்றே மாறுபட்ட மனநிலையில் இருந்தால், ஏனென்றால் இங்கு எப்பொழுது மழை நிற்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூட சரியாக கணிக்க இயலாது. தான் திரும்பி வர இன்னும் சில நாட்களாகும் என்ற செய்தியை தனது வீட்டிற்கு தெரிவித்துவிட்டு, காலை உணவை உட்கொள்ள உணவு வழங்கும் இடத்திற்கு சென்றாள். அந்தப் பகுதி மக்களால் அதிகம் விரும்பி உண்ணும் உணவான காரமான இறைச்சி மற்றும் மீன் தயாரிப்புகளுடன் கூடிய சாதத்தையும் சிறிது உட்கொண்டாள். பின்பு, தனது அறை நோக்கி செல்லும் வழியிலுள்ள மண்டபத்தில், அதே மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் ராகவ், டெங் என்னும் இரு நபர்களை சந்தித்தாள்.  குறைந்தது மூன்று நாட்கள் மிக கன மழை இடைவிடாமல் பெய்யும் என்பதால் என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பார்வதி, தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், பணியின் காரணமாக நகர்புறத்தில் வசித்து வருகிறாள். அவள் மழைக்காலத்தைப் பற்றிய அவளது அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்கிறாள்.

(குறிப்பு: அவர்களின் உரையாடல் தமிழில்)

பார்வதி:

மழைக்காலம் என்றாலே பொதுவாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், வானெங்கும் கார்மேகம் சூழ்ந்து, இடி மின்னலுடன் தேவர்கள் பூமிக்கு அளித்த பரிசாக எங்கும் ஆனந்தமாக இருக்கும். பள்ளிக் கல்லூரிகளுக்கும், அவ்வப்போது அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடைக்கும், அனைவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பல கதைகள் பேசுவோம், அம்மா சூடாக பலகாரங்கள் செய்து தருவார், சிறு சிறு விளையாட்டு, பெற்றோருக்கு தெரியாமல் மழையில் நனைவது, நண்பர்களுடன் கடந்தகால நினைவுகளை பரிமாறிக்கொள்ளவது என்று நாட்கள் அழகாக செல்லும். வயல்களில் பயிர்களை நட்டு மழைக்காக காத்திருக்கும் உழவர்களுக்கு இந்த காலம் மிகவும் பொற்காலம் என்றே சொல்லலாம். வறண்ட நதி, ஓடை, ஆறு, ஏறி, குளம் எங்கும் நீர்cநிறைந்து அனைத்து உயிர்களும் மகிழ்வாக மழைக்காலத்தை வரவேற்போம். இதுவே, சில சமயங்களில் மழை விடாமல் இரு வாரங்களுக்கு மேல் பெய்தால் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும். அன்றாட தேவைகளுக்கே வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை, மிகுந்த மழையால் வெள்ளம், பயிர் சேதம், மலைச்சரிவு, மரம் விழுதல் போன்றவையும், நெசவு, கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும், பல்வேறு இன்னல்களையும் சந்திக்க நேரிடும். இவ்வாறு, மழையின் இரு முகங்களையும் கிராம வாழ்க்கையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், நகர்ப்புற வாழ்க்கை முறை மழைக்காலங்களில்  மிகவும் மாறுபட்டே காணப்படுகிறது. வருடத்தின் சில நாட்களில் மழைப் பொழிந்தாலும், அனைத்து பகுதிகளையும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதால் சிறு அளவு மழைப்பொழிவு கூட மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெருகிவரும் நீர் வெளியே செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே உள்ள குழிகளில் நிரம்பி தொற்றுகளையும் ஏற்படுத்துகிறது. இவை தானாக வற்றுவதற்கு பல நாட்களாகிறது, இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், குடியிருப்புகள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் ஏரிக்கரையோரம் கட்டப்படுவதாலும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதிலும், புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில், மின்சாரம், உணவு, தண்ணீர், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளே கிடைக்காமல் அல்லல்படும் மக்களே இங்கு அதிகம். அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பல்வேறு சமூக நல அமைப்புகள், தனி மனிதர்கள் என அனைவரும் உதவினாலும், இவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. நகர்ப்புற மக்களும் மழையை ரசிக்க, அந்த காலகட்டத்தை அனுபவிக்கவே விரும்புகிறார்கள், ஆனால், இது போன்ற சூழ்நிலை, அவர்களுக்கு மழையின் மேல் சிறு வெறுப்பை திணிக்கின்றது. எனினும், சிறு குழந்தைகள் அனைத்தையும் மறந்து, மழையை கொண்டாடவே செய்கின்றனர்.

இவ்வாறு, மழைக்காலங்கள் மக்களின் வாழ்விடத்தையும், சுற்றுப்புறத்தையும் மற்றும் பல்வேறு காரணிகைளையும் கொண்டு பல மாறுபட்ட உணர்வுகளை மக்களின் மனதில் விதைக்கிறது; என்று, பார்வதி தனது வாழ்க்கை அனுபவத்தை, இரு நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டாள். இவற்றையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த அவளது நண்பர்களில் ஒருவரான டெங் -ன்  மனதில் பல நினைவலைகள் தவழ்ந்து சென்றன.

டெங், இவர் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள ஏழாவது பெரிய நாடான மாலியில் அரௌனே அல்லது அரவான் என்ற பெயர் கொண்ட சகாராபாலைவனத்தின் ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த கிராமம் ஒரு காலத்தில் சகாரா வர்த்தகத்தில் ஒரு நிறுவனமாக செயல்பட்டது. 

டெங்:

சகாரா, ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா போன்ற பலப் பகுதிகளைஉள்ளடக்கியது. இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா என்பதில் இருந்து எழுந்ததாகும். மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சகாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சகாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன.இப்போதய சகாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது.வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் வருடாந்திர மழையைப் பெறுகின்றது.பருவகால அளவின் படி, சகாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ  வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது, மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது.

கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சகாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.சகாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சகாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.சகாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சகாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். இதன் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர். இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 


இந்த சகாரா பாலைவனத்திலுள்ள ஒரு சிறு கிராமமான அரௌனேவில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். இங்கு வாழ்க்கை முறை மிகவும் கடினமானது. இதைச் சுற்றியுள்ள பாலைவனம் முற்றிலும் தரிசாக உள்ளது, மழைப்பொழிவு எந்த விவசாயத்தையும் அனுமதிக்க முடியாத அளவுக்கு குறைவாக உள்ளது மற்றும் கிராமம் கேரவன் வர்த்தகத்தையே நம்பியிருக்கிறது, இது இப்போதெல்லாம் வடக்கே 420 கிமீ தொலைவில் உள்ள சுரங்கங்களிலிருந்து உப்புத் தொகுதிகளைக் கொண்டு செல்வதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அரௌனே வெப்பமான பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது, இது டோம்போக்டோ பிராந்தியத்திற்கு பொதுவானது. இது சகாரா பாலைவனத்தின் மேற்குப் பகுதியிலுள்ள வெப்பமான பகுதிகளில் ஒன்றாகும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு அரிதாகவே 45 மிமீ  பொழியும், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் மாறுபடும் மற்றும் பெரும்பாலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் விழும். ஆண்டு சராசரி வெப்பநிலை சுமார் 29 °C (84.2 °F) ஆகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் சராசரியாக அதிகபட்சம் 42.8 °C (109 °F) ஐத் தாண்டி, 46.6 °C (115.9 °F) என்ற உச்சநிலையை அடைகிறது.இது பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும்.

எங்களைக் கடந்து செல்லும் சொற்ப மேகங்கள் எங்கள் மீது மழைப் பொழியாத என்ற ஏக்கத்தில் எங்களின் ஒவ்வொரு நாளும் பல வருடங்களாக நகர்ந்தன. அவ்வப்போது செல்லும் கார்மேகங்கள் ஆங்காங்கே பன்னீர்த்துளிகளை சிந்திச் செல்லும், அதுவும் நாங்கள் வீட்டினுள்ளே இருந்து வெளியில் வருவதற்குள் கரைந்துவிடும். எங்கள் பகுதியைச் சுற்றியுள்ள நீராதாரங்களும் மிகவும் குறைவு, மேகங்கள் மழைப் பொழிந்தால் மட்டுமே அவை நிரம்பும், இல்லையேல் அன்றாட வாழ்க்கை என்பது மிகவும் கடினம்.பாலைவனப் பகுதியென்பதால் அவ்வளவாக மரங்களும் இங்கே வளராது. உணவு, நீர் போன்ற அனைத்திற்கும் நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அவ்வப்போது வர்த்தகத்திற்கு வரும் வாகனங்களில் எங்களுக்கு நீர், உணவு போன்ற பொருள்கள் வந்து சேரும். கல்விப்படிப்பிற்கு நாங்கள் நெடுந்தூரம் பயணித்து அங்கேயேத் தங்கி கல்விக் கற்கிறோம். பின்பு பணிக்குச் சென்றபின் எங்களால் முடிந்த உதவியை கிராம மக்களுக்கு செய்கிறோம். இது எங்களின் பூர்வீக வசிப்பிடம் என்பதால் எவ்வளவு இன்னல்கள் வந்தபோதும், இவ்விடத்தைவிட்டு மக்கள் வெளியேற விரும்பவில்லை. எனினும் சொற்ப மழைப்பொழிவு, வறட்சி காரணமாக 1000 மக்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் தற்பொழுது 300 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர், மற்ற அனைவரும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். இங்கு தற்பொழுது வாழும் மக்கள் என்றாவது ஒருநாள் அவர்களின் தலைமுறை இந்த சகாராவிலுள்ள அரௌனே கிராமத்தில் பாலைவனம் நீங்கி பசுமையோடு வாழும் என்ற நம்பிக்கையில் தான் தங்களின் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார்கள். அந்த நம்பிக்கையின் விளைவாக பிறந்ததே எனது பெயர், டெங். இது ஆப்பிரிக்க மக்களின் மழைக் கடவுளின் பெயராகும்.

ஓர் பாலைவனப் பகுதியில் வாழ்ந்து வந்த எனக்கு இந்த மேகாலயாவிலுள்ள மௌசின்ரம் பகுதி ஒரு சொர்கமாகவே உள்ளது. இங்கேயே குடிபெயர்ந்து விடலாம் என்றுகூட தோன்றுகிறது; என்று மழையுடன் கொண்ட தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தார் டெங். தாங்கள் மேகங்களோடும், மழையோடும் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்த இருவரும், ராகவ் அவற்றோடு  கொண்ட உறவை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தனர்.

ராகவ், தற்பொழுது இவர்கள் தங்கியிருக்கும் மௌசின்ரமின் சோரா பகுதியிலிருந்து 16கிமீ தொலைவிலுள்ள, உலகின் அதிகமாக மழைபொழியும் இரண்டாவது இடமான சிரபுஞ்சியிலிருந்து வருகிறார். இவரது மூதாதையர்கள் மேகலாயாவின் பலப்பகுதிகளில் வசித்து வந்தனர்,பிறகு இடம்பெயர்ந்து கடந்து ஒரு நூற்றண்டாக இவர்கள் சிரபுஞ்சியில் வசிக்கின்றனர். 

ராகவ்:

வருடத்தின் அனைத்து மாதங்களும் இங்கே மழை, மழை, மழை, மட்டும்தான்!  மரங்களின் மீது தவழ்ந்து வரும் மேகங்களை தொட முயற்சிக்கும் குழந்தைகளின் விளையாட்டு மிகவும் ரசிக்கும்படி இருக்கும். மேகங்களைத் தொடும் பொழுது விண்ணையே கையில் ஏந்தும் ஓர் அலாதியான இன்பம் அது. டெங், நீங்கள் மேகங்களுக்கும், மழைப்பொழிவிற்கும் ஏங்குவது போல, நாங்கள் பெரும்பாலும் வெயிலுக்கு ஏங்குகிறோம், சூரியன் சற்றே மேகத்தைக் கிழித்துக்கொண்டு வந்து பிரகாசமான தனது கதிர்களைக் கொண்டு இப்பகுதியை வெப்பப்படுத்தத்தா என்று நாங்கள் ஏங்கிய நாட்களே அதிகம். பார்வதி, நீங்கள் மழை, வெயில், பனி, இலையுதிர் காலமென ஆண்டின் அனைத்து பருவநிலைகளையும் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இங்கே என்றும் எப்பொழுதும் ஒரே காலநிலை தான், மழைக்காலம். வருடம் முழுவதும் மழைப்பொழிவு இருப்பதால் அடிக்கடி ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன, எனவே, இங்கு அதிக நாட்கள் மின்வெட்டு ஏற்படும், மரக்கட்டைகளை வைத்தே மக்கள் வீட்டினுள் குளிர் காய்கின்றனர், அதுவும் பல நேரங்களின் ஈரமாகி சிரமத்தை ஏற்படுத்தும். இது அன்றாட வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது. சிரபுஞ்சியில் சாதாரணமாக மக்கள் ஒரு மூங்கில் கூடையின் கீழ் (போலோ என்று அழைக்கப்படும்) கரி நெருப்பை வைத்து, கூடையின் மேல் ஈரமான மற்றும் ஈரமான ஆடைகளை உலர வைக்கிறார்கள். சிரபுஞ்சியில் பல ஆண்டுகளாகப் பெய்த மழைப்பொழிவுத் தரவுகளைப் படிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10ஆம் தேதி முதல் பருவமழைக்கு முந்தைய மழை சிரபுஞ்சியில் வந்து சேரும். இங்கே, விவசாயம் ஒரு தொழிலாக இல்லாததால், வாழ்க்கை வழக்கம் போல் செல்கிறது, ஆனால் அதிக நேரம் வீட்டிற்குள் சூடான கரி நெருப்பைச் சுற்றி செயலற்ற நிலையில் இருக்கின்றோம். எங்களைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல பகுதிகள் என இருந்தாலும், பெரும்பாலும் அவற்றை வெளியில் சென்று காணமுடிவதில்லை. இதன் இயற்கை அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் மறக்கமுடியாத ஓர் அங்கமாக இவ்விடம் இருக்கின்றது. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளையும், மலைப்பகுதிகளில் விளையும் மூலிகைகள், தாவரங்கள், மருந்துகளையும், சில கைவினைப் பொருள்களை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதில் உள்ளது.


இவ்வாறு தொடர்ந்து மழைப் பொழிவதால் எங்களால் எந்த விழாக்களையும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிவதில்லை, முக்கியமாக தீபாவளி, இந்தியாவின் மிக சிறப்பானப் பண்டிகைகளில் ஒன்று. வான வேடிக்கைகளையும், வெடிகளையும் வெடிக்க முடியாமல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மனவருத்தமும், வேடிக்கையான குறும்பும் கொண்ட அந்த நாட்கள் இருக்கவே செய்கிறது. எனினும் நாங்கள், அந்த நேரத்தை குடும்பத்துடன் அன்போடும், ஆனந்தத்தோடும் செலவிடுகிறோம். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் தொலைந்து போகின்ற உறவுகளின் நடுவே, இயற்கை எங்களை ஒன்று சேர்க்கிறது என்ற பெருமையும், நன்றியும் என்றுமே இந்த சிரபுஞ்சியைச் சேரும். 


இப்படியாக இவர்களின் உரையாடல் நடந்து முடிந்தது, ஒவ்வொருவரும் மற்றவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளையும், மழையால் அவர்கள் பார்த்து, அனுபவித்த நன்மைகளையும், இக்கட்டான சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டனர். இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வை காலநிலை மாற்றங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மூவரும் உணர்ந்தனர். உரையாடல் முடியும் தருவாயில், கார்மேகங்கள் மெல்ல நகர்ந்தன,இருள் மெல்ல விலகியது, புது வெளிச்சம் வந்தது, வானொலியில் மழை மேகங்கள் என்றும் போல் இல்லாமல் இன்று தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்றன, எனவே மக்கள் நாளையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற செய்தி வந்தது. மூவரும் நிம்மதியாக அடுத்த நாளைக்கான காலநிலை மாநாட்டிற்கு தங்களைத் தயார் செய்து கொண்டு, உறங்க அவர்களின் அறைகளுக்கு சென்றனர். ராகவ் மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த நாளைக்கான சூரியனை வரவேற்கக் காத்திருந்தார், அதே சமயம் டெங்- விற்கு சகராவின் சிறு கிராமத்தில் வசித்து வரும் அவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, 5 வருடங்களாக மழைபொழிவே இல்லாத நமது கிராமத்தைச் சுற்றி எங்கும் கார்மேகங்கள் சூழ்ந்துள்ளன, இன்று நல்ல மழை பெய்யப்போகிறது என்று அவரின் தாயார் மகிழ்வோடு கூறினார்.இதைக்கேட்டு ஆனந்தம் கொண்ட டெங், தனது பெயருக்கான பலன் இன்று இறைவனின் அருளால் இயற்கையின் வழியே கிடைத்தது என்று உளம் பூரித்து இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்று தெரிவித்து உறங்கச் சென்றார், அன்றைய இரவு ஆனந்தமாக உறங்கியது!

கார்மேகங்களின் பயணம் தொடரும்...



No comments:

Post a Comment