Wednesday, February 14, 2018

வீரத்தமிழன்!




கற்சிலைக்கும் உயிர்க்கொடுத்தான்
காவேரிக் கரையோரம் நெல் விதைத்தான்!
காலத்தால் அழியாத கலைகள்
பல வளர்த்தான் !

பாரெங்கும் போற்றும் பண்பாடும்
இவனுடைய தன்றோ!
கடல் கடந்து முதலில் வாணிபம் செய்த
கடல் அரசனும் இவனன்றோ!

பழமொழிக்குள் பல கதைகள் வைத்து ,
கதைகளுக்குள் பல விஞ்ஞானத்தை வைத்துத்
தன் தலைமுறைகளுக்கு
உணர்த்தியத் தலைவன் இவனன்றோ !

வானசாஸ்திரம்  கணிதம் மருத்துவம்
விஞ்ஞானம் கட்டிடக்கலை ஓவியக்கலை
முத்தமிழென இவன் அறிந்திருந்த
அறிவியல் தான் எத்தனை ! எத்தனை !

தாய்க்கு இணையான மரியாதையைத் தன்
தாய் மொழிக்கல்லவா கொடுத்தான் !

சொல்லிலும் செயலிலும் வீரம் கொண்டவன் !
உலகெங்கும் படையெடுத்தது வெற்றி கண்டவன் !
தன்னைப் படைத்த இறைவன் மீது
இவன் கொண்ட அன்பைச்  சொல்ல
இவன் எழுப்பிய கோவில்களும், கோபுரங்களும்
செதுக்கி வைத்தச் சிற்பங்களும் தான் எத்தனை !

எண்ணற்ற மன்னர்களும் வீரர்களும்
ஞானிகளும் புலவர்களும் சித்தர்களும் வாழ்ந்த
இந்த புனித மண்ணில் ,
இம்மண்ணின் மைந்தர்களோ ! இன்று 
அந்நியனின் அடிமை என்னும் போர்வைக்குள்
தெரிந்தே சிக்கிக்கொண்டுள்ளனர் !

தம் தாய் மண்ணின்
பழமையையும்  பண்பாட்டையும்,
கல்வியையும் கலாச்சாரத்தையும்,
மருத்துவத்தையும் அறிவியலையும்,
இன்று மூட நம்பிக்கை என்னும்
மாய வலைக்குள் அடைத்துவிட்டு,
அந்நியனின் முட்டாள் தனத்திற்கு
அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் !

பெற்றக் கல்வியும் அறிவும் இங்கே
பொய்யாய்ப் போக ,
அடிமைத்தனமும் அறியாமையும்
உச்சத்தை எட்டிவிட்டது !
எங்கே போனது? எம் தமிழ் மக்களின்
வீரமும்  அன்பும் பண்பும்
அறிவும் திறமையும் ?

காற்றில் எழுதப்பட்ட வரிகளெனக்
கரைந்து விடவா, எம் மக்கள்
கல்வெட்டுகள் செப்பேடுகளென
செதுக்கி வைத்தனர் ?

போதும் அந்நியனின் மாய வலைக்குள்
கட்டுண்டு தவித்தது .
வரலாற்றைத் தேடு, நீ யார் என்று தெரியும்!
உன் வீரம் , திறமை , பலம்
என்ன  என்று புரியும் !
எழுந்து வா ! எதிரிகளே இல்லாமல் செய்வோம் !
நம் தமிழ் உலகை ஆளட்டும்!
நம் தமிழ் மக்கள் உலகைக் காக்கட்டும் !

Tuesday, February 13, 2018

இறுதி நொடிகள்!





உதிரும் தருணத்திலும் , சில நொடிகள் 
காற்றிலே அங்குமிங்கும் தவழ்ந்து சென்று, 
ஆனந்தத்தில் திழைத்திருக்கும்  
இலைச்சருகுகளுக்குள் தான்,
எத்துனை இன்பம் ! 

மழைக்காடுகள்!






இப்பூமியின் மொத்த அழகையும் 
இஞ்ஞாலத்தின் ஞானம் அனைத்தையும் 
தன்னுள் கொண்டவளே!

ஞானிகளும் தேடிச்செல்லும் 
அமைதியின் உறைவிடம் நீயன்றோ!

விலகிச்செல்லும் மேகங்களையும்  
தன் பச்சைநிறக் கம்பளத்தால் 
கவர்ந்திழுப்பவளே!

கார்மேகங்களின் மீது
நீ கொண்ட காதலால் 
உருகியதோ! அம்மேகக்கூட்டங்களும் 
மழைத்துளிகளாக!

மௌனமாய் மழைத்துளிகளும் 
உன்னில் மோட்சமடைய,
மண்ணி லுறங்கிய விதைகளும் 
உயிர்ப்பெற்றனவோ!

பல உயிர்களின் 
உறைவிடமாய் இருப்பவளே,
நானும் உன்னில் பிறக்கவே 
ஆசைக் கொண்டேன்!

சிறுதுளி நீர்த் தேக்கத்தால் 
சிறகை யுலர்த்தும் 
சிறு பறவையாய !

பல வண்ணங்களை  யேந்தி 
உம்மை வலம்வரும் ஒரு 
வண்ணத்துப்பூச்சியாய்!

மரத்தின் உச்சியில் 
காற்றுடன் போராடி தன் 
குஞ்சுகளை அடைகாக்கும் 
சிறு பறவையின் இறகாய்!

பல்வேறு வண்ணங்களில் 
உம்மை அலங்கரித்து 
உமக்கு மணம் சேர்க்கும் 
வண்ண மலர்களாய்!

ஆங்காங்கு உம்மைப் 
பற்றிக்கொண்டு  வளரும் 
படர்க்கொடியாய் !

ரீங்காரமிட்டு தேனைத் 
தேடிச்செல்லும் வண்டுகளாய்!  
ஓய்வின்றி உழைக்கும் 
சிறு எறும்புகளாய் !

தனக்கில்லை யென்றறிந்தும் 
பூக்களைத் தேடித்  தேனை
சேர்க்கும் தேனீக்களாய்!

உம்மில் பிறக்கும் 
தெளிந்த நீரோடையாய்!
நீரோடையில் நீந்தும் 
அழகிய மீன்களாய்!

உன்னில் நித்தமும் 
உருகி கரைகிறேன்!

சூரியனும் வர அஞ்சும் 
உன் உறைவிடம் தேடி,
இவள் மனம் செல்ல!

உனதழகில் இவளும் ஏனோ 
தன்னைத் தொலைத்தாள்!

பெ.திவ்யா