Sunday, October 26, 2025

குமரிக்கண்டம் முதல் கல்கி அவதாரம் வரை — தமிழரின் யுக சிந்தனை

தமிழ் நாகரிகம் உலகின் மிகப் பழமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்கள், சித்த நூல்கள், புராணங்களின் புனித தத்துவங்கள் அனைத்தும், மனித வாழ்க்கை ஒரு சுழற்சி எனவும், உலகம் அழிந்து மீண்டும் உருவாகும் எனவும் கூறுகின்றன. இதே சிந்தனைவே வேத மற்றும் விஷ்ணு புராணங்களிலும் “யுக சுழற்சி” என விளங்குகிறது.

மூன்று சங்கங்கள் மற்றும் குமரிக்கண்டம்

தமிழ் மரபு கூறும் மூன்று சங்கங்கள்:

  1. முதல்சங்கம் (குமரிக்கண்டத்தில்)
  2. இடைச்சங்கம் (கடலில் ஒரு பகுதி மூழ்கியபின்)
  3. கடைச்சங்கம் (மதுரையில்)

இந்த சங்கங்கள் கூறுவது, உலகம் பலமுறை “பிரளயம்” அடைந்து மீண்டும் உயிர் பெறுகிறது. கடல் உயர்வால் நிலம் மூழ்கி, நாகரிகம் அழிந்தது; பின்னர் மீண்டும் புதிய நாகரிகம் உருவானது.

இது வேதங்களில் வரும் “பிரளயம்” (மகா பிரளயம்) என்ற கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறது.

வேதங்களும் புராணங்களும் கூறுவது:

ரிக் வேதம், பாகவத புராணம், விஷ்ணு புராணம் போன்றவை பின்வருமாறு  கூறுகின்றன:

உலகம் நான்கு யுகங்களில் சுழல்கிறது:

சத்ய, த்ரேதா, துவாபர, கலி.

கலியுகம் முடிவில்:

கல்கி அவதாரம் தோன்றி, அநியாயம், அக்கிரமம் அனைத்தையும் அழித்து, புதிய சத்யயுகத்தை ஆரம்பிப்பார்.”

— (பாகவத புராணம் 12.2.18–20)

அந்த காலத்தில் மனிதர்கள் ஆசை, பொய், வஞ்சகம், பாவம் ஆகியவற்றால் மூழ்கி இருப்பார்கள். விஷ்ணுவின் ஒளி வடிவம், கல்கி — வெண்குதிரையில் வருவார், தர்மத்தை மீட்டெடுப்பார்.

தமிழ் நூல்களின் சிந்தனை:

திருமந்திரம் கூறுகிறது:

அறம் குறையும் போது உலகம் குறையும்;

அறம் உயரும் போது உயிர் உயரும்.”

இது யுக சுழற்சியின் அடிப்படை விதி. அறம் (தர்மம்) வீழ்ந்தால் கலி, உயர்ந்தால் சத்யயுகம்.

திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவை விஷ்ணுவின் அவதாரங்களைப் போற்றி, ஒவ்வொரு யுகத்திலும் அவர் தர்மத்தை நிலைநிறுத்த வந்ததாக கூறுகின்றன.

ஆழ்வார்கள் பாடிய தசாவதார ஸ்தோத்திரங்கள் தமிழ் வழியாகவே வேத சிந்தனையை மக்களிடம் கொண்டு வந்தன.

குமரிக்கண்டம் புராணம் மற்றும் சில சங்கக் கதைகள் யுக மாற்றம் பற்றிக் கூறுவது:

கடல் உயர்வால் உலகம் மூழ்கும்.அதன்பின் மீண்டும் நிலம் பிறக்கும். மனிதர்கள் புதிய வழியில் மீண்டும் வாழ்வார்கள்.

இது பிரளயம் — மறுபிறப்பு — தர்ம சுழற்சி என்ற வேதப் பின்புல சிந்தனையுடன் இணைகிறது.

தமிழர்கள் அதனை “பூமி புதிதாகப் பிறப்பது” எனக் கூறினர்.

கல்கி அவதாரம் — தமிழ் பார்வையில்:

ஆழ்வார்கள், சித்தர்கள், திருமூலர் போன்றோர் கூறுவது:

யுகங்கள் மாறும்; தெய்வ அவதாரம் வரும்;

அவன் தர்மம் மீட்டெடுப்பான்.”

சித்தர்கள் பலர் கலியுகத்தின் முடிவில் மனித ஆன்மா விழித்தெழும் என குறிப்பிடுகின்றனர்.

அது கல்கி தத்துவத்தின் ஆன்மீக வடிவம், வெளியில் வரும் வீர அவதாரம், உள்ளே எழும் ஞான அவதாரம்.

தமிழர் மரபும், வேத மரபும் வேறுபட்ட பாதையில் நடந்தாலும், இரண்டிலும் ஒரு ஒற்றுமை உண்மை நிலவுகிறது.

தர்மம் வீழ்ந்தால் தெய்வம் அவதரிக்கிறது; பிரளயம் முடிந்தால் பூமி மீண்டும் மலர்கிறது.

அதுவே, குமரிக்கண்டத்தின் சிந்தனையிலும், வேதத்தின் கல்கி அவதாரத்திலும் நாம் உணரும் ஓர் உண்மையான மையக் கருத்து!

புராணங்கள் மற்றும் தமிழகத்தின் வரலாற்று இணைநிலை

இந்திய நாகரிகத்தின் ஆன்மிக வரலாற்றைச் சொல்லும் முக்கிய நூல்களில் ஒன்று புராணங்கள். இவை வேதங்களுக்குப் பிறகு வந்த, மக்களின் வாழ்க்கை, மதம், யுக சுழற்சிகள், அவதாரங்கள் ஆகியவற்றை எளிதாக விளக்கும் கதை வடிவ நூல்கள்.
பெரும்பாலான புராணங்களை வேத வியாசர் தொகுத்தார் எனக் கூறப்படுகிறது.
இவை கிமு 500 முதல் கிபி 1000 வரை பல கட்டங்களாக எழுதப்பட்டு வளர்ந்தன.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் வடஇந்தியாவில் புராணங்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது, தென்னிந்தியாவின் தமிழகம் பெரும் அரசியல், இலக்கிய, ஆன்மிக வளர்ச்சியை அனுபவித்தது.
இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது, பண்டைய இந்திய நாகரிகத்தின் முழுமையான படிமம் வெளிப்படும்.

கிமு 500 – கிபி 300 : சங்ககாலம் மற்றும் புராணங்களின் ஆரம்பம்

இந்தக் காலத்தில் வடஇந்தியாவில் புராணக் கதைகள் வாய்மொழியாக பரவிக் கொண்டிருந்தன. சமுதாயம் வேதங்களிலிருந்து மக்கள் வாழ்க்கை நோக்கமாக மாறிய காலம்.

தமிழகத்தில் இதே சமயத்தில்:

  • சேரர், சோழர், பாண்டியர் ஆட்சி செய்தனர்.
  • மதுரை, உரையூர், வஞ்சிநகர் போன்ற நகரங்கள் வளர்ந்தன. 
  • அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்கள் எழுந்தன. 
  • கவிஞர்கள் இயற்கை, காதல், வீரம், அரசன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைகள் படைத்தனர்.
இந்தக் காலம் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் செழித்து வளர்ந்த முதற்பெரும் யுகம் ஆகும். வடத்தில் உருவான புராணக் கதைகளும், தென்னில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களும் இரண்டும் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

புராணங்களில் விவரிக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள், தர்மம், உலகச் சுழற்சி போன்ற கருத்துகள் தமிழகக் கோவில்களின் சிற்பங்களிலும் காணப்படுகின்றன. இதனால் வடக்கும் தெற்கும் ஆன்மிகக் கலாச்சாரத்தை பரிமாறிக் கொண்டன.

கிபி 600 – 900 : பக்தி இயக்கம் மற்றும் பாகவத காலம்

இந்தக் காலத்தில் வடஇந்தியாவில் பாகவத புராணம், ஸ்கந்த புராணம், லிங்க புராணம் போன்றவை எழுதப்பட்டன.
இவை விஷ்ணு, சிவ வழிபாட்டை மையமாகக் கொண்ட பக்தி நூல்களாகும்.

தமிழகத்தில் அதே சமயம்:

  • நாயன்மார்கள், ஆழ்வார்கள் எழுச்சி பெற்றனர்.
  • தேவரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவை தோன்றின.
  • மக்களிடம் தர்மம், அன்பு, பக்தி ஆகியவை பரவியன.
  • சைவம், வைணவம் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, தமிழகத்தில் பக்தி இயக்கம் வேரூன்றியது.

இதன் மூலம் வட இந்திய புராணங்கள் கூறிய பக்தி தத்துவம், தமிழில் பாட்டாக, உணர்வாக, வாழ்க்கையாக வெளிப்பட்டது.

கிபி 900 – 1000 : சோழர் பேரரசு மற்றும் புராணங்களின் இறுதி வடிவம்

இந்தக் காலம் வட இந்தியாவில் அக்னி புராணம், ப்ரம்மாண்ட புராணம் போன்ற நூல்கள் இறுதி வடிவம் பெற்றது.
புராணங்களில் உலகச் சுழற்சி, கல்கி அவதாரம், தர்ம நாசம், மறுபிறப்பு ஆகிய கருத்துகள் வலுப்பெற்றன.

தமிழகத்தில் இதே நேரத்தில்:

  • சோழர் பேரரசு எழுச்சி பெற்றது.
  • விஜயாலய சோழன், அதித்ய சோழன், பராந்தக சோழன் ஆகியோர் ஆட்சியில் கலை, கல்வி, மதம் செழித்தது.
  • கோவில் கட்டிடங்கள், கலைச்சிற்பங்கள், வேத பாடசாலைகள் உருவாயின.
  • மதுரை, காஞ்சி, திருச்சி ஆகியவை கல்வி மையங்களாக வளர்ந்தன.

இந்தக் காலம் தமிழ்நாட்டின் “பெரிய நாகரிக மறுபிறப்புக் காலம்” எனச் சொல்லலாம்.
வட இந்திய புராணங்கள் சொன்ன “தர்மம் மீண்டும் எழுச்சி பெறும்” கருத்து,
தமிழகத்தில் நிஜமாக நடந்தது.

புராணங்கள் எழுதப்பட்ட வட இந்திய காலம்,தமிழகத்தில் பக்தி, இலக்கியம், கலை ஆகியவற்றின் பொற்காலமாக இருந்தது.

வட இந்தியா தத்துவத்தை உருவாக்கியபோது, தமிழகம் அதை வாழ்வாக மாற்றியது. இரண்டும் சேர்ந்து இந்திய ஆன்மிக நாகரிகத்தின் இரு பக்கங்கள் ஆனது.

புராணங்கள் சொல்லும் தர்ம சுழற்சி, அவதாரம், பக்தி ஆகிய கருத்துகள் தமிழ் இலக்கியத்திலும், கோவில்களிலும், மக்களின் நம்பிக்கையிலும் நன்கு பதிந்துள்ளன.

அதனால், புராணங்களின் காலம் என்பது, தமிழ்நாட்டின் கலாச்சார மறுமலர்ச்சியின் பொற்காலமும் ஆகும்.

Friday, October 24, 2025

காகிதத்தின் வரலாறு

நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை கண்டறியப்பட்ட விதம், அவை எப்படி நம்மை வந்து சேர்ந்தன என்பதைப் பற்றிய வரலாற்றை நாம்  சிந்திப்பது என்பது மிகவும் அரிது. மனித நாகரிக வளர்ச்சிகளின் கண்டுபிடிப்புகளே இவை. இவையனைத்தும் எத்தனையோ மனிதர்களின் சிந்தனைகளில் பிறந்து, எண்ணங்களில் தவழ்ந்து இன்று நம் முன் பிரகாசிக்கின்றன. அவற்றில் ஒன்றான காகிதத்தின் வரலாற்றை இங்கு காண்போம்.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.

நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆம் நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார். சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர்.

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.

சீனாவில் காகிதம் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர். சுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர். எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிலிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள். 

பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது, இது கிரேக்க(பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர் . பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.

அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுத்தபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

இந்திய துணைக்கண்டத்தில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் 7 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முதலில் தோன்றின. அதன் பயன்பாடு 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு சீன புத்த யாத்திரை நினைவுக் குறிப்புகள் மற்றும் சில இந்திய பௌத்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பூசாரிகள் மற்றும் சாதாரண மக்கள் புத்தர் படத்தை பட்டு அல்லது காகிதத்தில் அச்சிட்டு, இந்த படங்களை வணங்குவதைப் பற்றி யிஜிங் எனும் துறவி எழுதினார். அவரது நினைவுக் குறிப்பில், ஐ-சிங் எழுதினார், இந்தியர்கள் தொப்பிகளை உருவாக்கவும், குடைகளை வலுப்படுத்தவும் மற்றும் சுகாதாரத்திற்காகவும் காகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள். 644 கிறிஸ்துவ காலத்தில் (CE) இந்தியாவிலிருந்து 520 கையெழுத்துப் பிரதிகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றதாக சுவாங்சாங் குறிப்பிடுகிறார், ஆனால் இவற்றில் ஏதேனும் காகிதத்தில் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

15 ஆம் நூற்றாண்டில், சீனப் பயணி மா ஹுவான் வங்காளத்தில் காகிதத்தின் தரத்தைப் பாராட்டினார், இது "ஒரு மரத்தின் பட்டையிலிருந்து" தயாரிக்கப்பட்ட வெள்ளை காகிதம் என்றும் "மான் தோலைப் போல பளபளப்பாகவும் மென்மையாகவும்" இருப்பதாக விவரித்தார். மரப்பட்டைகளை காகிதத்திற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவது, மேற்கு ஆசிய அல்லது மத்திய ஆசியாவை ஆண்ட சுல்தான்களிடமிருந்து  இல்லாமல், நேரடியாக சீனாவிலிருந்து இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வழியே   வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவிலிருந்து திபெத் மற்றும் நேபாளம் வழியாக காகிதத் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்திருக்கலாம், புத்த துறவிகள் சுதந்திரமாக பயணம் செய்து, திபெத் மற்றும் இந்தியாவில் உள்ள புத்த மையங்களுக்கு இடையே கருத்துக்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொண்டனர். காகிதத்தில் இருந்து சூத்ரா புத்தகங்களை தயாரிப்பதற்காக துன்ஹுவாங் போன்ற சீன மடாலயங்களால் பின்பற்றப்பட்ட இந்திய தலபத்ரா பிணைப்பு முறைகளால் இந்த பரிமாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திபெத்திய மடாலயங்களில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான ஆரம்பகால சூத்ரா புத்தகங்கள் இந்திய கையெழுத்துப் பிரதிகளை பிணைக்கும் முறைகளுடன் இணைக்கப்பட்ட சீன காகித துண்டுகளில் உள்ளன. மேலும், இந்த வரலாற்று கையெழுத்துப் பிரதிகளின் மரத்தடி புத்தக அட்டைகளின் பகுப்பாய்வு, இது திபெத்  அல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த வெப்பமண்டல மரத்தால் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர். நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார். நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காகிதத்தின் வரலாற்றையும் மகிமையையும் சிறிதேனும் தாங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாளை!?  மற்றுமோர் வரலாற்றின் சுவடுகளில் இணைவோம்!