Thursday, September 25, 2025

ஓர் நதியின் பயண‌ம்!

 அன்று சூன் மாதம் அதிகாலை பௌர்ணமிக்கு முந்தைய நாள், குரு பூர்ணிமா விழா மிகச் சிறப்பாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் மிக விமர்சியாக நடந்து கொண்டிருந்தன. பாலா, தூக்கத்திற்கும் அவன் அம்மாவின் எழு குரலிற்கும் நடுவே போராடிக்கொண்டிருந்தான். வீட்டில் அனைத்து வேலைகளும் முடியும் நிலையில் உள்ளன இன்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய் என அவன் பாட்டியின் குரல், கனவில் மிதந்து கொண்டிருக்கும் அவன் காதில் மிகவும் சிரமப்பட்டு நுழைந்தது, மெதுவாகக் கண்களைத் திறந்து குளியல் அறைக்குள் நுழைந்து, தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டான், இடையில் அவன் அம்மா அழைக்கவே அப்படியே விட்டுவிட்டு சென்றவன் வருவதற்குள் இங்கு தண்ணீர் வெகுவாக வழிந்தோடியது, எதேர்சையாக அந்த பக்கம் வந்த அவனது பாட்டி, குழாயை நிறுத்தி விட்டு பாலாவை அழைத்து, "என்ன இது, இப்படித்தான் நீரை வீணாக்குவதா? குழாயை நிறுத்தி விட்டு சென்றிருக்கலாம் அல்லவா, இனிமேல் இவ்வாறு செய்யாதே", என்று இவனை கடிந்து கொண்டார். பாலாவும், "சரி பாட்டி" என்று ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்று சொல்லி விட்டு தயாராகச் சென்றான்.

அனைவரும் தயாரானதும், வீட்டில் இறைவழிபாட்டை முடித்துவிட்டு, உணவருந்தி விட்டு , ஓர் பயணத்திற்குத் தயாரானார்கள். பாலா, 8ம் வகுப்பு படிக்கும் சிறு மாணவன், இவனது குடும்பம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள, ஜெய்ப்பூரில் வசித்து வருகின்றனர், இவனது தாய் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை வட இந்தியாவைச் சேர்ந்தவர். இவர்கள் ராஜஸ்தானில் குடியேறி நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது இவனது தாத்தாவின் பூர்விக இடம்  என்பதால், இவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமாவிற்கும் இவர்கள் சிந்து நதியை வழிபட லடாக்கில் உள்ள இவர்களது பெரிய பாட்டியின் வீட்டிற்கு செல்வது வழக்கம், ஆனால், தொடர்வண்டி, பேருந்தில் செல்ல ஒரு நாளுக்கு மேல் ஆகும் என்பதால் இவர்கள் டெல்லிக்கு வானூர்தியில் சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு வானூர்தியில் லடாக்கை அடைந்தனர். 

சிந்து நதி,  இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது. இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றும் இந்த ஆறு, லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இது பாக்கிஸ்தானின் மிக நீண்ட ஆறு மற்றும் தேசிய நதி ஆகும். இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது. சிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு, பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது. உலகின் சில நதிகளில் மட்டுமே காணப்படும் ஒன்றான கழிமுக அலைஏற்றம் சிந்து ஆற்றில் காணப்படுகிறது. இதன் நீராதாரமானது திபெத், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பாக்கிஸ்தானின் வடக்கு நிலங்கள் ஆகியபகுதிகளிலும், இமயமலை காரகோரம், இந்து குஷ் ஆகிய மலைகளில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளில் இருந்து கிடைக்கிறது. ஆற்றின் நீர்பெருக்கானது பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது - குளிர்காலத்தில் நீர் பெரிதும் குறைந்து காணப்படும், சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலத்தில் வெள்ளம் மிகுந்து காணப்படும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆற்றின் போக்கில் நிலையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கும் மற்றும் பல அன்றாடத் தேவைகளுக்கும் நீர் இன்றியமையாத ஒன்றாகிறது. அந்நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாடுவதே இந்தத் திருவிழா. சிந்து நதி, நாட்டின் மிக நீளமான நதியாகவும், பல்வேறு நாட்டிற்கு நன்மை பயப்பதாகவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பல காலகட்டத்தில் பாய்ந்து நன்மை பயப்பதாகவும் உள்ளது. எனவே இந்நதிக்கரையில் தீபம் ஏற்றி ,வண்ண மலர்களைச் சூட்டி, பல்வேறு வாணவேடிக்கைகள் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாலாவின் குடும்பம் லடாக்கைச் சென்றடைய அன்று இரவாகி விட்டது. எனவே அவர்கள் உணவருந்தி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டனர். அடுத்த நாள் விழா கோலாகலமாக ஆரம்பித்தது, அருகிலுள்ள சிவன் கோவிலில் கடவுளை வழிபட்டுவிட்டு, ஆற்றில் தீபங்களை ஏற்று மிதக்க விட்டு, நீருக்கு நன்றி செலுத்தினர். பிறகு அங்கு ஓடும் சிந்து நதியின் ஓர் சிறு ஓடையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

இமய மலையில் உற்பத்தியாகி வரும் இந்நீரின் நிறம் அவை கடந்து வரும் பாதைகளின் நிறங்களை அழகாகப் பிரதிபலித்தது. உயரமான மலைச் சிகரங்களுக்கு நடுவே, வெள்ளி ஓடையென பாயும் இந்நதியின் சலசலப்புகளுக்கு இடையே அலைபாயும் மனமும், அதன் அமைதியில் அடங்கும் மனமும் இன்னும் சுவாரசியமாகவே இருந்தது. பாலா, நதியின் ஒரு கரையோரமாக கால்களை நதியில் விட்டபடி அவ்வப்போது அவன் பாதைகளைத் தொட்டுச் செல்லும் மீன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது பாட்டியும் அவனோடு சேர்ந்து கொண்டார், அவர் ஏதோ கேட்க, பாலா எதுவும் பேசாமல் ஓர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அறிந்த அவர், "பாலா!, என்ன சிந்தனையில் உள்ளாய்?" என்று சற்று உரத்தக் குரலில் கேட்க, கற்பனை உலகிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான், பாலா. தனது கேள்விகளுக்கு பாட்டியிடம் பதில் இருக்கலாம் என்றுணர்ந்த அவன், "பாட்டி, பெரும்பாலும் நதிகள் மழை மேகங்களிலிருந்து பூமிக்கு வந்து அவை பல்வேறு கிளைகளாகப் பிரிந்து மக்களுக்கு பயனளிக்கின்றன என்று நான் படித்திருக்கிறேன், ஆனால்,  வறட்சி காலங்களில் மழைப் பொழியா விட்டால் இவர்கள் நீராதாரத்திற்கு என்ன செய்வார்கள்?" என்று கேட்டான். பாட்டி, சிறு புன்னகையோடு பதிலளித்தார், நீரை அணைகள் கட்டியும், சிறு ஏறி குளங்களை உருவாக்கியும் சேமிப்பார்கள், வறட்சி காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வர், ஆனால், கிராமப் புறங்களை விட, நகர்ப்புறங்களில் நீர் அதிகமாக, தேவையையும் தாண்டி செலவழிக்கப் படுகிறது, இவை வறட்சிக் காலங்களில் நகர்ப்புறங்களை மட்டுமல்லாது, இந்த நதிகளின் நீரையே நம்பி வாழும் இக்கிரமங்களின் நீராதாரத்தையும் பாதிக்கின்றது. என்று பாலாவின் பாட்டி சொல்லி முடிக்கையில், அவனது மனது நேற்று அதிகாலை, குளிப்பதற்காக குழாயைத் திறந்து விட்டு சரியான நேரத்தில் மூடாமல், வீணாகிய நீரை எண்ணி சற்றே வேதனைக் கொண்டது. தான் செய்தது தவறு, இனி இவ்வாறு நீரை எந்த சூழலிலும் வீணாக்க கூடாது என்று அவன் உணர்ந்தான். நாம் இன்று வீணாக்கும் சிறு துளி நீர் கூட முகமறியா மனிதர்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்தான்.அன்றிலிருந்து நீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும், தேவையில்லாமல் வீணாக்க கூடாது என்றும் தனது பள்ளியில் நடக்கவிருக்கும் பேச்சுப்போட்டியில் நீரை மையமாகக் கொண்டு உரையாற்ற வேண்டுமென்று முடிவு செய்தான்..

பாலா இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில், அவனது பாட்டி ஏதோ சொல்ல முற்படுவதை உணர்ந்தான். "பாலா, நம் வாழ்க்கையும் ஒரு நதி போன்றதே, நதி எவ்வாறு தனது பாதையில் வரும் வளைவு நெளிவுகளுக்கேற்ப தனது போக்கை மாற்றிக்கொள்கிறதோ, பாதையின் வரும் தடைகளை எவ்வாறு புத்துணர்ச்சியோடும், விடாமுயற்சியோடும் எதிர்த்து கடந்து செல்கிறதோ, அவ்வாறு நாமும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உருவமற்ற நீர், அது பயணிக்கும், சேரும் இடத்தைப் பொறுத்தே உருவம் பெறுகிறது, அதுபோல், நீ உன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களைக் கடந்து செல்ல பழகிக்கொள், ஆனால், ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு செய்தியாவது இருக்கும் என்பதை என்றும் மறவாதே. வண்ணமற்ற, தூய்மையான நீரைப்போல், எப்பொழுதும் உனது மனதை வைத்திரு, அப்பொழுது இந்த நதியின் தேடலைப் போல், உன் வாழ்விற்கானத் தேடலை நீ எளிதில் கண்டடைவாய்! " என்று பாட்டி தனது அனுபவங்களை உரைக்க, அசையா ஜோதியாய் அவனது மனம் அதை உள்வாங்கியதை அவன் உணர்ந்தான்!

இந்த குரு பூர்ணிமா நான்னாளில், தனது பாட்டியே தனக்கு ஓர் குருவாய் தெரிந்ததைக் கண்டு மகிழ்வுற்றான்! இங்கு தனது பாட்டி மட்டும் குருவல்ல, மலைச்சிகரங்களும், வானைப் பிரதிபலிக்கும் தெளிவான நீரோடையும், அமைதியான வானமும், சுற்றியிருக்கும் அனைவருமே தனக்கு ஓர் குருவாக இருப்பதை உணர்ந்தான்! இயற்கையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்வோடு அவர்கள் இருவரும் நதிக்கும், இயற்கைக்கும் மேலும் சில மலர்களைத் தூவி நன்றி கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர்.

நம் மனதில் அனுபவமும், மாற்றமும் எந்த நிலையிலும், யார் வழியாகவும் நிகழலாம், அதற்கு என்றுமே உங்களை தயார் நிலையில் வைத்திருங்கள்!

நதியின் பயணம் தொடரும்...     

மலைகளின் மடியில் ஓர் நாள்!

நம் வாழ்க்கையின் நிமிடங்களை காலத்தின் சுவடுகளில் அழகாக செதுக்குவதில் பயணங்களின் பங்கு மிகவும் அளப்பரியது. துவண்ட மனம் மகிழ்ச்சியைத் தேடினாலும், மகிழ்ச்சியான மனம் அமைதியைத் தேடினாலும்,  அந்தத் தேடலின் முதலில் தோன்றுவது பயணம் மட்டுமே. மனதை விசாலமாக்கவும், ஆன்மாவின் ஆழத்திலுள்ள உண்மையை அறியவும் பயணம் மிகவும் அவசியமாகிறது. நிலை கொண்ட மனதைவிட, நீரோடைப் போன்ற மனதே வாழ்வின் பல புதிர்களைத் திறந்து அதன் உண்மையை அறிகிறது. 

நாம் நேசிக்கும், நம்மை மிகவும் நேசிக்கும் மனிதர்களுடன் ஒரு சில அடிகள் மேற்கொள்ளும் பயணமே வாழ்வின் இனிமையான தருணங்களாக மலரும். அப்படி நானும் எனது கணவரும் இயற்கையோடு மேற்கொண்ட  ஓர் பயணத்தின் அழகானத் தருணங்களோடு நீங்களும் பயணிக்க வாரீர். 

அன்று சனவரி 17, 2022. எனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு, சற்று மாலை நேரமாக 3 மணியளவில் எங்காவது செல்லலாம் என்று நாங்கள் யோசித்த தருணம், நினைவில் உதித்தது கொல்லிமலை. நான் நாமக்கல் மாவட்டத்தில் வசித்தவர் என்றாலும், ஒரு முறை கூட இம்மலைக்குச் சென்றதில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் செல்ல வேண்டும் என்ற என் ஆவல் இன்று எனது கணவரின் வழியே நிறைவேறியது. 

கொல்லிமலை இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. இந்த எழில் நிறைந்த கொல்லிமலையை நோக்கிய எங்களது பயணம் தொடர்ந்தது. சிறு சிறு குக்கிராமங்களின் வழியே நாங்கள் பயணித்தோம், ஆங்காங்கே வயல்கள், பச்சைப் போர்வைப் போர்த்தியது போன்ற மலைகள், ஏரிகள், அதில் தன் அழகை ரசித்துக்கொண்டே தவழும் மேகங்களின் ஓவியங்கள் எங்களது பயணத்தை மேலும் ரசிக்க வைத்தன. 

மலையடிவாரத்தை அடைந்ததும் அங்கே ஓர் தோகை மயில் பாதையைக் கடந்து சென்று எங்களை வரவேர்த்தது. இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் எதில் சென்றாலும் சற்று கவனத்தோடு வளைவுகளில் திரும்ப வேண்டும். மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.

நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் பல வாகனங்கள், பேருந்துகள், சென்ற வண்ணம் இருந்தன.மலையைச் சுற்றிலும் மிக உயரமான அடர்ந்த மரங்கள், வண்ண பூக்கள் கொண்ட கொடிகள், பாறையினூடே வளர்ந்திருந்த சிறு செடிகள், ஆங்காங்கே தாவிச்செல்லும் குரங்குகள் என்று ஒரே குதூகலமாய் இருந்தது. வெயிலும் மேகமூட்டமும் மாறி மாறி தங்களின் இருப்பை தெரிவித்தவாறு இருந்தன.

பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் பொது காலமான 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.

நாங்கள் இருசக்கர வானகத்தில் பயணித்தோம். மலையின் உச்சிக்கு செல்லச்செல்ல, ஒவ்வொரு வளைவுகளிலும் அதன்  உயரத்தைக் கண்டு எனக்குள் சிறு பயமும், ஆர்வமும் கலந்தே இருந்தது. பாதையின் ஓர் பகுதியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து,  ரோசாப்பூ வண்ணம் நிறைந்த மலர்களை மட்டுமே சுமந்துள்ள அழகிய மரத்தையும் அதன் மேல் கதிரவனின் ஒளிக்கற்றை மேகத்தை துளைத்துக்கொண்டு விழுவதையும் பார்த்தோம். இயற்கையின் இந்த அழகை சிறிது நேரம் ரசித்துவிட்டு, சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மலையுச்சியை நோக்கி சென்றோம். ஒரு வழியாக 70 வளைவுகளையும் கடந்து நாங்கள் மலை உச்சியை அடைந்தோம். அங்கு ஓர் பழமையான சிவன் கோவில் இருந்தது. கோவிலுக்கு முன்னே தீபம், பூ மற்றும் பல பூசைக்கு வேண்டிய பொருள்களின் கடைகள், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் பழங்கள் (நாம் இதுவரை பார்த்திடாத சுவைத்திடாத), மூலிகை வேர்கள் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள் மற்றும்  தின்பண்டக்கடைகள் என சில இருந்தன. கோவில் அப்பொழுது தான் சாத்தப்பட்டது என்பதால், நாங்கள் தீபம் ஏற்றி கடவுளை தரிசித்து விட்டு, அருகிலிருக்கும் நீரோடைக்குச் சென்றோம், எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக அந்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. சில படிக்கட்டுகள் நாங்கள் கீழே சென்றதும், ஆத்தோரமாக இருந்த பிள்ளையாரை வணங்கினோம், பின்பு அந்த நீரோடையில் சில நிமிடங்கள் இளைப்பாறினோம். அதிகமாக இல்லையென்றாலும் சிறிது மக்கள் கூட்டம் இருந்தது, அவர்கள் ஆற்றின் அடுத்த பகுதிக்கு அதன் வழியே நடந்து சென்று ஆங்காங்கே உள்ள சிறு ஓடையில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும்நீராடி மகிழ்ந்தனர். 

கொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

இங்கு பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன, வேகமாக இருள் சூழ ஆரம்பித்ததால், வேறெங்கும் செல்ல முடியவில்லை. எனவே, மலைவாழ் மக்களின் கிராமங்களின் வழியே சிறிது தூரம் பயணித்து பின்பு மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். இந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை இன்றும் பழங்கால வாழ்க்கை முறையை பெரும்பாலும் தன்னுள் கொண்டுள்ளது.அவர்களின் குடில்கள், உடை, விளையாட்டு, உணவு முறைகள், பேசும் விதம் என்று தொழில்நுட்பத்தின் சுவடுகள் படாத பாதைகளாய் இன்றும் புனிதமாக உள்ளன. இதனால் தானோ  என்னவோ, பழங்குடி மக்களே உலகின் பழைமையான மனித நாகரிகத்தின் ஆதி மனிதர்களாய், அவற்றைக் காக்கும் கடவுளின் குழந்தைகளாய் இன்றும் உள்ளனர்.

தொழில்நுட்பத்தின் பிடியில் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் நாம், அவற்றை விட்டு, சில காலம் நமக்கு அனைத்தையும் கொடுத்து நம்மை பாதுகாக்கும் இயற்கையின் மடியில் தவழ்ந்து இவ்வுலகை ரசிப்போம்!

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொல்லிமலை சென்று இயற்கையின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றைப்  பெறுங்கள்.    

பயணங்கள் தொடரும்.....


Wednesday, September 24, 2025

மழைக்கால கதைகள் - ஹவாயின் மழை நாள் கதைகள்

ஹவாய், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளின் கூட்டம். இது அமெரிக்காவின் 50வது மாநிலம் ஆகும். எரிமலைகள், பசுமையான மலைகள், நீலக் கடல், வெண்மையான மணல் கடற்கரை, வருடம் முழுவதும் இனிமையான காலநிலை ஆகியவற்றால் உலகம் முழுவதும் பிரபலமான சுற்றுலா தலமாக ஹவாயி திகழ்கிறது.
ஹவாயின் சொந்த மக்கள் பாலினீசியர் (Polynesians). அவர்கள் இயற்கையை தெய்வமாகக் கருதி வாழ்ந்தார்கள். அதனால் மழை, காற்று, கடல், சூரியன் ஆகிய அனைத்திற்கும் கதைகளும் புராணங்களும் உருவாகின.

மழை = அன்பின் அடையாளம்

ஹவாயியில் மழை வெறும் நீர்த்துளிகள் அல்ல. அது காதலின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அவர்கள் நம்பிக்கையின்படி, மழைத்துளிகள் வானத்திலிருந்து வரும் அன்பின் முத்தங்கள். இரண்டு காதலர்கள் பிரிந்திருந்தால், மழை அவர்கள் இடையே இணைக்கும் பாலமாகக் காணப்பட்டது. அதனால் அங்கே காதல் பாடல்களிலும் ஹூலா நடனங்களிலும் மழை அடிக்கடி வரும் சின்னமாகும்.

பெலே தேவியும் மழையும்

ஹவாயி மக்கள் நம்பும் எரிமலைக் கடவுள் பெலே மிகவும் சக்திவாய்ந்தவர். அவர் கோபம் கொண்டால் எரிமலை வெடிக்கும் என்று நம்பப்பட்டது.
அப்போது வானம் மழையை அனுப்பி, அவரது கோபத்தை அடக்கும் என்று கதைகள் சொல்லப்படும். அதனால் மழை என்பது கோபத்தை அடக்கும் தெய்வீக அருள் என்றும் கருதப்பட்டது.

ஒவ்வொரு இடத்திற்கும் தனி மழை பெயர்

ஹவாயியில் ஒவ்வொரு பகுதியும் தங்களுக்கென மழையை வேறுபடுத்திப் பெயரிடுகிறார்கள்.
• மெதுவாக சின்னஞ்சிறு துளிகளாக விழும் மழை – “லிலி மழை”
• பலத்த காற்றோடு சேர்ந்து அடிக்கும் மழை – “உஆ லோஆ”
• மலர்களின் மணத்தோடு கலந்து வரும் மழை – “லேஹுவா மழை”
இப்படி மழை ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு சூழலிலும் தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.

மழை = பாடல்களிலும் கவிதைகளிலும்

ஹவாயியில் ஹூலா நடனம் ஆடும் போது பாடப்படும் பாடல்களில் மழை அடிக்கடி இடம்பெறும். அங்கே மழை:
• காதலின் சின்னம்
• பிரிவின் நினைவுகள்
• இயற்கையின் பரிசு
• கடவுளின் ஆசீர்வாதம்
எனப் பலவகையில் பாடப்படுகிறது.

இவ்வாறாக ஹவாய் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அங்கமாக மழை திகழ்கிறது.

மீண்டும் ஒரு மழைக் கதையில் சந்திப்போம்!

நாம் அறியாத சில நாடுகளின் தனித்துவமான கலாச்சாரங்கள்!

 “ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விதம், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மரபு” என்று சொல்லலாம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் தனித்துவமான கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் சில உலகம் முழுவதும் பிரபலமாக பரவியிருக்கிறது. உதாரணத்திற்கு ஜப்பானின் தேநீர் சடங்கு, இந்தியாவின் தீபாவளி. ஆனால் சில கலாச்சாரங்கள், அந்நாட்டில் வாழும் மக்களுக்கே தெரிந்த ஆழமான விஷயங்களாக இருந்து விடுகின்றன.

இன்று நாம் நான்கு நாடுகளின் ஆச்சரியமான கலாசாரங்களைப் பார்க்கப் போகிறோம்.

ஜப்பான் – “அரண்ய நீராட்டு” (Shinrin-yoku)

ஜப்பான் உலகம் முழுவதும் ஒழுக்கம், சுத்தம், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றால் பிரபலமான நாடு. ஆனால் அங்கே வாழும் மக்களின் மன அழுத்தத்தை குறைக்க அவர்கள் பின்பற்றும் ஒரு தனித்துவமான வழக்கம் உள்ளது. அதற்கு பெயர் “Shinrin-yoku”, தமிழில் “அரண்ய நீராட்டு” என்று சொல்லலாம். இதன் பொருள் என்னவென்றால், மக்கள் காட்டுக்குள் சென்று, மரங்களின் நடுவே மெதுவாக நடந்துக்கொண்டு, சுத்தமான காற்றை சுவாசித்து, பசுமையோடு மனதை இணைத்துக்கொள்வது. இது ஒரு சிகிச்சை மாதிரி தான். மருத்துவ ரீதியாகவும் இதனால் மன அழுத்தம் குறைகிறது, இரத்த அழுத்தம் சீராகிறது என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
நம் ஊரில் "மரம்தான் மனிதனுக்கு மூச்சு" என்ற பழமொழி போல, ஜப்பானியர்கள் இயற்கையோடு ஒன்றிணைவதை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

ஃபின்லாந்து – “ஒவ்வொருவரின் உரிமை” (Everyman’s Right)

ஃபின்லாந்து உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளில் எப்போதும் முதலிடம் பிடிக்கும். அதற்குக் காரணம் அவர்களின் இயற்கை-நட்பு வாழ்க்கை முறை. அங்குள்ள காடுகள், ஏரிகள், பசுமையான புல்வெளிகள் இவைகளை யாருடைய நிலம் என்பதைக் கவலைப்படாமல் அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கலாம். மக்கள் விரும்பினால் காடுகளில் முகாமிட்டு தங்கலாம், காட்டு பழங்களைப் பறித்து சாப்பிடலாம், பறவைகளை ரசிக்கலாம். இதற்கு அவர்கள் “Jokamiehen Oikeus” (ஒவ்வொருவரின் உரிமை) என்று பெயர் வைத்துள்ளனர். இயற்கை எந்த ஒருவருக்கும் சொந்தமல்ல, எல்லாருக்கும் பொதுவானது என்ற எண்ணம் இதற்கு அடிப்படை.

நம் நாட்டில் "பசுமை எல்லோருக்கும் பொது செல்வம்" என்ற கருத்து அடிக்கடி பேசப்பட்டாலும் நடைமுறையில் அதை நாம் பின்பற்றுவதில்லை. ஆனால் ஃபின்லாந்தில் அது சட்டமாகவே இருந்து, மக்களின் வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

பூடான் – மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness)

உலக நாடுகள் பொதுவாக GDP (Gross Domestic Product) அடிப்படையில் தான் தங்கள் வளர்ச்சியை அளவிடுகின்றன. அதாவது பொருளாதாரம் எவ்வளவு உயர்ந்தது, மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஆனால் சிறிய மலைநாட்டு இராச்சியமான பூடான் ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. அவர்கள் மகிழ்ச்சியையே நாட்டின் வளர்ச்சி அளவுகோலாக எடுத்துக்கொண்டனர். இதற்குப் பெயர் “Gross National Happiness” (GNH).

இந்த கொள்கையின் கீழ், பணம் மட்டும் போதாது—மக்கள் மனநிறைவு, ஆன்மீகம், ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவையும் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இதனால் தான் பூடான் “உலகின் மிக மகிழ்ச்சியான நாடு” என்று அழைக்கப்படுகிறது. நமக்கு இது ஒரு அழகான நினைவூட்டல்—பணம் எல்லாவற்றிற்கும் மேலானது அல்ல, மகிழ்ச்சியே வாழ்க்கையின் உண்மையான செல்வம்.

எதியோப்பியா – சிறப்பு கொண்ட நாட்காட்டி

நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் காலண்டரில் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் எதியோப்பியாவில் மட்டும் 13 மாதங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான நாட்காட்டி உள்ளது.
அதில் 12 மாதங்கள் 30 நாட்களாகவும், கூடுதலாக 13வது மாதம் 5 அல்லது 6 நாட்களாகவும் இருக்கும். இதை அவர்கள் “Pagume” என்று அழைக்கிறார்கள்.
அதிலும் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், எதியோப்பிய காலண்டர் உலகின் மற்ற நாடுகளை விட 7–8 ஆண்டுகள் பின்னால் செல்கிறது. அதாவது, உலகம் 2025-இல் இருந்தால், எதியோப்பியா இன்னும் 2017-இல் தான் இருக்கும்! இது அவர்கள் பண்டைய கிறிஸ்தவக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இன்று கூட அவர்கள் தினசரி வாழ்க்கையிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த நாட்காட்டியைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நான்கு நாடுகளின் கலாசாரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை:
• ஜப்பான் – இயற்கையோடு ஒன்றிணையும் சிகிச்சை
• ஃபின்லாந்து – எல்லோருக்கும் இயற்கையை அனுபவிக்கும் உரிமை
• பூடான் – பணத்தை விட மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம்
• எதியோப்பியா – உலகத்திலிருந்து வேறுபட்ட நாட்காட்டி

இவை அனைத்தும் அந்தந்த மக்களின் வாழ்க்கை முறையை, சிந்தனையை, மதிப்புகளை காட்டுகின்றன. நமக்கும் இதில் பல பாடங்கள் இருக்கின்றன. இயற்கையோடு நெருக்கமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைப் பணத்தை விட மேலானதாகக் காண வேண்டும், பழமையான மரபுகளை மதிக்க வேண்டும்.

இந்த கலாசாரங்களில் உங்களுக்கு மிகவும் ஆச்சரியமளித்தது எது? ஏன்? கீழே கருத்துகளில் சொல்லுங்க.