நம் வாழ்க்கையின் நிமிடங்களை காலத்தின் சுவடுகளில் அழகாக செதுக்குவதில் பயணங்களின் பங்கு மிகவும் அளப்பரியது. துவண்ட மனம் மகிழ்ச்சியைத் தேடினாலும், மகிழ்ச்சியான மனம் அமைதியைத் தேடினாலும், அந்தத் தேடலின் முதலில் தோன்றுவது பயணம் மட்டுமே. மனதை விசாலமாக்கவும், ஆன்மாவின் ஆழத்திலுள்ள உண்மையை அறியவும் பயணம் மிகவும் அவசியமாகிறது. நிலை கொண்ட மனதைவிட, நீரோடைப் போன்ற மனதே வாழ்வின் பல புதிர்களைத் திறந்து அதன் உண்மையை அறிகிறது.
நாம் நேசிக்கும், நம்மை மிகவும் நேசிக்கும் மனிதர்களுடன் ஒரு சில அடிகள் மேற்கொள்ளும் பயணமே வாழ்வின் இனிமையான தருணங்களாக மலரும். அப்படி நானும் எனது கணவரும் இயற்கையோடு மேற்கொண்ட ஓர் பயணத்தின் அழகானத் தருணங்களோடு நீங்களும் பயணிக்க வாரீர்.
அன்று சனவரி 17, 2022. எனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு, சற்று மாலை நேரமாக 3 மணியளவில் எங்காவது செல்லலாம் என்று நாங்கள் யோசித்த தருணம், நினைவில் உதித்தது கொல்லிமலை. நான் நாமக்கல் மாவட்டத்தில் வசித்தவர் என்றாலும், ஒரு முறை கூட இம்மலைக்குச் சென்றதில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் செல்ல வேண்டும் என்ற என் ஆவல் இன்று எனது கணவரின் வழியே நிறைவேறியது.
கொல்லிமலை இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. இந்த எழில் நிறைந்த கொல்லிமலையை நோக்கிய எங்களது பயணம் தொடர்ந்தது. சிறு சிறு குக்கிராமங்களின் வழியே நாங்கள் பயணித்தோம், ஆங்காங்கே வயல்கள், பச்சைப் போர்வைப் போர்த்தியது போன்ற மலைகள், ஏரிகள், அதில் தன் அழகை ரசித்துக்கொண்டே தவழும் மேகங்களின் ஓவியங்கள் எங்களது பயணத்தை மேலும் ரசிக்க வைத்தன.
மலையடிவாரத்தை அடைந்ததும் அங்கே ஓர் தோகை மயில் பாதையைக் கடந்து சென்று எங்களை வரவேர்த்தது. இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் எதில் சென்றாலும் சற்று கவனத்தோடு வளைவுகளில் திரும்ப வேண்டும். மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் பல வாகனங்கள், பேருந்துகள், சென்ற வண்ணம் இருந்தன.மலையைச் சுற்றிலும் மிக உயரமான அடர்ந்த மரங்கள், வண்ண பூக்கள் கொண்ட கொடிகள், பாறையினூடே வளர்ந்திருந்த சிறு செடிகள், ஆங்காங்கே தாவிச்செல்லும் குரங்குகள் என்று ஒரே குதூகலமாய் இருந்தது. வெயிலும் மேகமூட்டமும் மாறி மாறி தங்களின் இருப்பை தெரிவித்தவாறு இருந்தன.
பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் பொது காலமான 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
நாங்கள் இருசக்கர வானகத்தில் பயணித்தோம். மலையின் உச்சிக்கு செல்லச்செல்ல, ஒவ்வொரு வளைவுகளிலும் அதன் உயரத்தைக் கண்டு எனக்குள் சிறு பயமும், ஆர்வமும் கலந்தே இருந்தது. பாதையின் ஓர் பகுதியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து, ரோசாப்பூ வண்ணம் நிறைந்த மலர்களை மட்டுமே சுமந்துள்ள அழகிய மரத்தையும் அதன் மேல் கதிரவனின் ஒளிக்கற்றை மேகத்தை துளைத்துக்கொண்டு விழுவதையும் பார்த்தோம். இயற்கையின் இந்த அழகை சிறிது நேரம் ரசித்துவிட்டு, சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மலையுச்சியை நோக்கி சென்றோம். ஒரு வழியாக 70 வளைவுகளையும் கடந்து நாங்கள் மலை உச்சியை அடைந்தோம். அங்கு ஓர் பழமையான சிவன் கோவில் இருந்தது. கோவிலுக்கு முன்னே தீபம், பூ மற்றும் பல பூசைக்கு வேண்டிய பொருள்களின் கடைகள், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் பழங்கள் (நாம் இதுவரை பார்த்திடாத சுவைத்திடாத), மூலிகை வேர்கள் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள் மற்றும் தின்பண்டக்கடைகள் என சில இருந்தன. கோவில் அப்பொழுது தான் சாத்தப்பட்டது என்பதால், நாங்கள் தீபம் ஏற்றி கடவுளை தரிசித்து விட்டு, அருகிலிருக்கும் நீரோடைக்குச் சென்றோம், எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக அந்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. சில படிக்கட்டுகள் நாங்கள் கீழே சென்றதும், ஆத்தோரமாக இருந்த பிள்ளையாரை வணங்கினோம், பின்பு அந்த நீரோடையில் சில நிமிடங்கள் இளைப்பாறினோம். அதிகமாக இல்லையென்றாலும் சிறிது மக்கள் கூட்டம் இருந்தது, அவர்கள் ஆற்றின் அடுத்த பகுதிக்கு அதன் வழியே நடந்து சென்று ஆங்காங்கே உள்ள சிறு ஓடையில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும்நீராடி மகிழ்ந்தனர்.
கொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
இங்கு பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன, வேகமாக இருள் சூழ ஆரம்பித்ததால், வேறெங்கும் செல்ல முடியவில்லை. எனவே, மலைவாழ் மக்களின் கிராமங்களின் வழியே சிறிது தூரம் பயணித்து பின்பு மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். இந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை இன்றும் பழங்கால வாழ்க்கை முறையை பெரும்பாலும் தன்னுள் கொண்டுள்ளது.அவர்களின் குடில்கள், உடை, விளையாட்டு, உணவு முறைகள், பேசும் விதம் என்று தொழில்நுட்பத்தின் சுவடுகள் படாத பாதைகளாய் இன்றும் புனிதமாக உள்ளன. இதனால் தானோ என்னவோ, பழங்குடி மக்களே உலகின் பழைமையான மனித நாகரிகத்தின் ஆதி மனிதர்களாய், அவற்றைக் காக்கும் கடவுளின் குழந்தைகளாய் இன்றும் உள்ளனர்.
தொழில்நுட்பத்தின் பிடியில் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் நாம், அவற்றை விட்டு, சில காலம் நமக்கு அனைத்தையும் கொடுத்து நம்மை பாதுகாக்கும் இயற்கையின் மடியில் தவழ்ந்து இவ்வுலகை ரசிப்போம்!
உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொல்லிமலை சென்று இயற்கையின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றைப் பெறுங்கள்.
பயணங்கள் தொடரும்.....
No comments:
Post a Comment